கம்பம் அருகே கஞ்சா போதையில் தகராறு செய்தது குறித்து போலீசாரிடம் புகார் அளித்ததால் தன்னை இரும்பு வாளியால் தாக்கிய இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டக் கல்லூரி மாணவி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அண்மையில் இப்பள்ளி வளாகத்தில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர், பள்ளி அருகே வசிக்கும் சட்டக் கல்லூரி மாணவி உட்பட பொதுமக்கள் பலரிடம் தகாத முறையில் பேசி, அச்சுறுத்தியாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சட்டக் கல்லூரி மாணவி, ரோந்து பணியில் இருந்த ராயப்பன்பட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அந்த இளைஞர்களை போலீசார் எச்சரித்துச் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாணவியிடம் மீண்டும் தரக்குறைவாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாணவி சம்மந்தப்பட்ட இளைஞரின் வீட்டிற்கு தனது உறவினருடன் சென்று முறையிட்டுள்ளார். அப்போது அந்த இளைஞர் மாணவியை இரும்பு வாளியால் தாக்கியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாதிக்கப்பட்ட மாணவி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.