உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நடிகை சினேகா கலந்து கொண்டார்.
உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மேத்தா தலைமையில் நடைபெற்ற மகளிர் தின மாரத்தான் போட்டியில் சிறப்பு விருந்தினராக நடிகை சினேகா கலந்து கொண்டார்.
மாரத்தான் போட்டியை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மேத்தா, துணை ஆணையர் மகேஸ்வரி, நடிகை சிநேகா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கானத்தூர் தொடங்கி முட்டுக்காடு வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சிநேகா, மகளிர் தினத்தில் மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
சென்னை அம்பத்தூரை அடுத்த மாதனங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் உலக மகளிர் தினத்தையொட்டி பிங்க் நிற ஆடை அணிந்து இன்ஃபினிட்டி வடிவில் மாணவிகள் நின்று உலக சாதனை படைத்தனர். சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்தன.
மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் பிரம்மாண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது. மகளிர் காவல்துறை சார்பில் மகளிர் உதவி எண் 181, பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.