திண்டுக்கல் சந்தை ரோடு பகுதியில் உள்ள அரசு பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 5 மாணவர்களை பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான சந்தை ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், 4ஆம் வகுப்பு அறையில் மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதில், படுகாயமடைந்த 5 மாணவர்களையும், ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்துராமலிங்கம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளியில் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணி நடைபெற்றதாகவும், ஒப்பந்ததாரர் லாப நோக்கத்துடன் கட்டத்தை கட்டியதால் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமாக ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதேபோல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் பள்ளி கட்டடங்கள் உறுதியாகக் கட்டப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.