ஜிஎஸ்டி வரி விகிதம் மேலும் குறைக்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிகங்கள் 5,12,18,28 சதவீத அடிப்படையில் வசூலிக்கப்படும் நிலையில், இந்த வரிவிகிதம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி தொடர்பான ஆலோசனைக் குழுவினர், வரிவிகிதத்தை குறைக்கவும், வரியை மாற்றி அமைக்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் வருவாய் நடுநிலை விகிதம் 15.8 சதவீதத்தில் இருந்தது என்றும், 2023ஆம் ஆண்டில் 11.4 சதவீதமாகக் குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
தற்போது வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதால் ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும் என தெரிவித்தார். மேலும், வரி விகிதம் மற்றும் வரி அடுக்குகளை பகுத்தாய்வு செய்யும் பணி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.