சிம்பொனி அனுபவத்தை தன்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
35 நாட்களில் இசைஞானி இளையராஜா எழுதி முடித்த சிம்பொனி அரங்கேற்றம் நிகழ்ச்சி லண்டனில் உள்ள ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில் விமரிசையாக நடைபெற்றது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இளையராஜா தனது சிம்பொனி இசையை அரங்கேற்றினார். ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவுடன் அரங்கேற்றம் செய்யப்பட்ட வேலியண்ட் சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.
இதன் மூலம், சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இசைஞானி இளையராஜா படைத்துள்ளார். சிம்பொனியின் சக்கரவர்த்திகளாக விளங்கிய மொசாட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகியோர் வரிசையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து ரசிகர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், சிம்பொனி அனுபவத்தை தன்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என நெகிழ்ச்சியுடன் கூறினார். அதனை அனுபவித்தால் மட்டுமே புரியும் என்றும் கூறினார். அதனை நீங்கள் அனுபவித்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.