தூத்துக்குடி அருகே கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜாஹீரா என்பவர் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக செவிலியர்கள் மட்டும் பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை, கர்ப்பவாய் விரிவடைதல் காரணமாக தொய்வு இருந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஜாஹீரா அனுமதிக்கப்பட்டார் எனவும், பரிசோதனையில் தாய் மற்றும் சிசுவுக்கு நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் இல்லாதது கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இறப்பிற்கான காரணம் கண்டறியப்படும் என குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை, புதுக்கோட்டை சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மற்றும் 2 செவிலியர்கள் சிகிச்சை அளித்த நிலையில், மருத்துவர் இல்லாததால் தாயும் சேயும் உயிரிழந்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது எனவும் கூறியுள்ளது.