இந்திய ராணுவத்தின் வீர் நாரி திட்டம் மூலம் மறைந்த ராணுவ வீரரின் மனைவி லெப்டினன்ட் அதிகாரியாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். பல இன்னல்களைத் கடந்து ஃபீனிக்ஸ் போல் அவர் மீண்டு வந்தது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரை சேர்ந்தவர் சோனி பிஸ்ட். இவர் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக பணியாற்றிய நீரஜ் சிங் பண்டாரி என்பவரைக் காதலித்து 2022 டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
வாழ்வைத் தொடங்கிய ஒரே மாதத்தில் துரதிர்ஷ்டவசமாக நீரஜ் திடீரென உயிரிழந்தார். இதனால் பேரதிர்ச்சியில் மூழ்கிய சோனி பிஸ்ட்-க்கு வீர் நாரி இடஒதுக்கீடு திட்டம் ராணுவத்தில் பணியாற்றுவதற்கான ஒரு வாய்ப்பை கொடுத்தது.
ராணுவத்தில் பணியாற்றி மரணம் அடைபவரின் மனைவி 35 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், கணவரின் இடத்தை நிரப்ப இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்தாண்டு மார்ச் மாதம் சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் இணைந்தார் சோனி பிஸ்ட்.
11 மாத கடுமையான பயிற்சியை முடித்த சோனி பிஸ்ட், கணவர் விட்டுச் சென்ற தேசத்திற்கான சேவையை பூர்த்தி செய்ய வேண்டி லெப்டினன்ட் அதிகாரியாக பதவியேற்றுக் கொண்டார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த 11 மாதங்கள் மறக்க முடியாத பல அனுபவங்களை கொடுத்தது எனவும் கணவரின் புகழ் தனது பதவியில் என்றைக்கும் நீடிக்கும் எனவும் கூறினார்.
மறைந்த ராணுவ வீரர்களின் தேசபக்தி கனவை நிறைவேற்ற சோனி பிஸ்ட் போன்ற பெண்கள் இந்திய ராணுவத்தில் இணைந்து தேசத்திற்கு சேவையாற்ற முன்வந்துள்ளனர். மத்திய அரசின் வீர் நாரி இடஒதுக்கீட்டின் வெற்றிக்கு சோனி பிஸ்ட் சிறந்த சான்று எனலாம்.