ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவரை 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய விவகாரத்தில் 5 தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம்போல் அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்றுள்ளார்.
கெட்டியம்மாள்புரம் பகுதியில் சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து தேவேந்திரனை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த மாணவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கபடி விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 தனிப்படைகளை அமைத்து தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனிடம் பாளையங்கோட்டை வட்டாட்சியர் மற்றும் பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் உள்ளிட்டோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சாதி பிரச்னை காரணமாக தனது மகன் தாக்கப்பட்டதாக தந்தை விக்னேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.