மாசி திருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் கோயில் மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட மேடையில் மணக்கோலத்தில் மத்தியபுரியம்மன், சுவாமி நன்மை தருவார் எழுந்தருளினார். தொடர்ந்து, வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கோயில் வாசலில் இருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 47 அடி உயர தேரில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம், ஆத்தூரில் அமைந்துள்ள சோளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு முக்கிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரானது கோயில் கலசங்கள் மீது ஊற்றப்பட்டன. இந்த விழாவில், அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆட்சியர் தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.