குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், பி.வி ரமணா, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 24 பேருக்கு குற்றபத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை டெல்லி சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் குடோன் உரிமையாளர்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே உள்ள ஆறு பேருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, விஜயபாஸ்கர், காவல்துறை முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 21 பேர் சேர்க்கப்பட்டு கூடுதல் குற்றபத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டது.
சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெறும் நிலையில் முன்னாள் அமைச்சர்கள், பி.வி ரமணா, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 24 பேருக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.