தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த மகளின் கணவரை தந்தையே கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில், ஒருவருக்கு மரண தண்டனையும், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தெலங்கானா மாநிலம், மிரியாளகுடாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மாருதி ராவ். இவரது மகள் அம்ருதவர்தினி கடந்த 2017-ம் ஆண்டு, தனது உற்ற நண்பரான பிரணை என்பவரை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார்.
மகளின் திருமண பந்தத்தை முறிக்க தந்தை மாருதி ராவ் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு கர்ப்பிணியான மனைவி அம்ருதவர்தினியை, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற பிரணையை கூலிப்படையினர் வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அம்ருதவர்தினியின் தந்தை மாருதி ராவ், பிரணையை கொலை செய்ய ஒரு கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவியது அம்பலமானது.
இந்த வழக்கில் மாருதி ராவ் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் கூலிப்படையைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனையும், மற்ற 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.