கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பின்னணி குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
உட்கட்சி விவகாரம், முறைகேடு குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களினால், கடந்த ஜனவரி 7ம் தேதி கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். அடுத்த பிரதமர் தேர்வாகும் வரை ட்ரூடோ பொறுப்பு வகிப்பதாக தெரிவித்திருந்தார். ஆளும் லிபரல் கட்சியின் தலைவரே பிரதமராகவும் பொறுப்பேற்பார் என்கிற அடிப்படையில், லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது,
இதில், மார்க் கார்னி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 674 வாக்குகளைப் பெற்றார். மொத்த வாக்கில் சுமார் 85.9 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார். நேரடி போட்டியாளராக கருதப்பட்ட கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் 11,134 வாக்குகளையும், கரினா கோல்ட் 4,785 வாக்குகளையும், பிராங்க் பெய்லிஸ் 4,038 வாக்குகளையும் பெற்றனர்.
இதையடுத்து, லிபரல் கட்சியின் தலைவராகவும் கனடாவின் 24வது பிரதமராகவும் ஆகியுள்ளார் மார்க் கார்னி. இவர், கடந்த 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் ஆளுநராகவும், 2011ம் ஆண்டு முதல் 2018 வரை நிதி மேலாண்மை வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
வங்கி மற்றும் நிதி மேலாண்மையில் அனுபவம் பெற்ற அவரை நிதி அமைச்சராக்க ஜஸ்டின் ட்ரூடோ விரும்பினார் என்கிறார்கள். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என நேரடி அரசியல் ரீதியிலான அரசு பொறுப்பு வராத அவர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகலுக்கு பின்னர், ட்ரூடோ வகித்த பதவிக்கே வந்துள்ளார்.
மார்க் கார்னி லிபரல் கட்சியில் இணைந்தால் மதிப்புமிக்க நபராக திகழ்வார். கனடா மக்களுக்கு வலுவான அரசியல் தலைவர்கள் தேவைப்படும் காலத்தில் அவர் உதவுவார் என்று கடந்த ஆண்டு ஜூலையில் ட்ரூடோ தெரிவித்தார். ட்ரூடோவின் சிறப்பு ஆலோசகராக இருக்கும் அளவிற்கு ட்ரூடோவின் நன்மதிப்பை பெற்றிருந்த மார்க் கார்னி, அவரது விருப்பப்படியே பிரதமராகிறார் என்கிறார்கள்.
பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, கனடாவின் நீர், நிலம், வளங்களை அமெரிக்கா விரும்புகிறது என்றும். கனடா ஒன்றும் அமெரிக்கா அல்ல என்றும் கூறிய மார்க் கார்னி, ஒருபோதும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா இருக்காது என்றும், நெருக்கடிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று தமக்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும்வரை அமெரிக்கப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை கனடா கைவிடாது. அமெரிக்கா உரிய மரியாதை கொடுத்து நம்பகத்தன்மை வாய்ந்த, நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வரை கனடா விதித்த வரி அமலில்தான் இருக்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார் மார்க் கார்னி. அவருடைய முதல் அறிவிப்பே கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து கனடா பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. பரஸ்பர வரி விதிப்பு முறையை ஏப்ரல் 2 வரை மட்டும் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதனால் கனடாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரி விதிப்பை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் பிரதமராகியுள்ள மார்க் கார்னிக்கு ஏகப்பட்ட சவால்கள் காத்திருக்கின்றன என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்து, இருநாடுகளுக்கு இடையில் சலசலப்பை மட்டுமல்ல, விரிசலை ஏற்படுத்தும் நிலை வரை சென்றது. பின்னர் இந்தியா, இந்தியர்களின் தேவை, முக்கியத்துவம் உணர்ந்து அமைதியாகியது கனடா.
வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சில மாதங்களே பிரதமராக இருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு நெருக்கமானவராக கருதப்படும், மார்க் கார்னியின் பொருளாதார, ராஜீயரீதியிலான நகர்வுகள் எப்படி இருக்கும் என்று உலக நாடுகள் உற்று நோக்கியுள்ளன. குறிப்பாக அமெரிக்கா அதிபரின் நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறார். இந்தியா உடன் உறவு மேம்படுமா? என்கிற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார் மார்க் கார்னி.