வைகை ஆறு மாசுபடுவதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
வைகை ஆறு மாசுபடுவது குறித்தும், ஆற்றில் கழிவு நீர் கலப்பது, குப்பைகள் கொட்டுவது குறித்தும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வைகை அணையை பாதுகாக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டதாக கருத்து தெரிவித்தனர்.
ஆறுகளில் மண் அள்ளுவதில் மட்டுமே பொதுப்பணித்துறை கவனம் செலுத்தி வருவதாகவும் ஆறுகளை பாதுகாக்கவோ, கண்காணிக்கவோ பொதுப்பணித்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து 5 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும் தனித்தனியே அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வைகை ஆற்றை பாதுகாக்க மாநில அரசு திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் ஏன் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,
மாநில அரசு திட்ட அறிக்கை கொடுத்தால், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட தயாராக உள்ளது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.