ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயியை நெஞ்சில் உதைத்து தாக்கிய ஊராட்சி செயலர் தங்கபாண்டியனுக்கு சொந்தமான நிலங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் அளவீடு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சிமன்ற செயலரான தங்கபாண்டியன் என்பவர் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அம்மையப்பன் என்ற விவசாயியை நெஞ்சில் காலால் உதைத்து தாக்கினார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறிய விவசாயியை தாக்கிய தங்கபாண்டியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தங்கபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சொந்தமான இடங்களை அரசு அதிகாரிகள் அளவீடு செய்தனர்.
படிக்காசுவைத்தான்பட்டி பகுதியில் உள்ள தங்கபாண்டியனுக்கு சொந்தமான திருமண மஹால், வீடுகள், கடைகள் மற்றும் விவசாய நிலங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் அளவீடு செய்தனர்.
மேலும், தங்கபாண்டியனின் சொத்து மதிப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தால் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.