கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க ஒரு குப்பை தொட்டி கூட அமைக்கவில்லை என அளிக்கப்பட்ட புகாரில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் குப்பைகளை சேகரிக்க ஒரு இடத்தில் கூட குப்பை தொட்டி அமைக்கப்படவில்லை என அப்பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவர் மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தார்.
மேலும் அந்த கடிதத்தில், நகராட்சியை முறையாக பராமரிக்காததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
திடக்கழிவு மேலாண்மை வரியை மக்களிடம் வசூலித்து விட்டு ஒரு குப்பை தொட்டி கூட அமைக்காமல் மக்களுக்கு நோயை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பது மனித உரிமை மீறல் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
தொடர்ந்து இந்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமை ஆணையம் குப்பைகளை முறையாக மேலாண்மை செய்யாதது தொடர்பாக கன்னியாகுமரி ஆட்சியர், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.