தமிழகத்தில் 50 சதவீத மாணவர்கள் மும்மொழி படிக்கும் போது மீதமுள்ள 50 சதவீத மாணவர்களுக்கு மும்மொழி கல்வி மறுக்கப்படுவது ஏன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் ஆயிரத்து 835 CBSE பள்ளிகள் இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது அதே அமைச்சர் CBSE பள்ளிகளின் எண்ணிக்கையை ஆயிரத்து 635-ஆக குறைத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கல்வித்துறை அளித்துள்ள புள்ளி விவரங்களின் படி தமிழகத்தில் 56 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும், 53 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளிலும் படிப்பதை மேற்கோள்காட்டியுள்ள அவர், 50 சதவீத மாணவர்கள் மும்மொழி படிக்கும் நிலையில், மீதமுள்ள 50 சதவீத மாணவர்களுக்கு மும்மொழி மறுக்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக கல்வி சிறப்பாக உள்ளதென்றால் திமுக எம்எல்ஏக்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அவர், திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழியாக இல்லாமல் விருப்ப மொழியாகவே உள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் தேர்தல் அரசியலை தாண்டி திமுகவினர் சிந்திக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.