சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் கனசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுப்பதாகவும், அரசு உத்தரவை மீறிய கோயில் தீட்சிதர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் 6 தீட்சிதர்கள் மீது பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், வழக்கை ரத்து செய்ய மறுத்து, தீட்சிதர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதேபோல், கனகசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்ய முயன்ற ஜெயசீலா என்ற பெண் பக்தரை, சாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக, தீட்சிதர்கள் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும் தீட்சிதர்கள் கவுரி சங்கர் உள்ளிட்ட 8 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தீட்சிதர்களுகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.