திருப்பூரில் வயதான தம்பதியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பல்லடத்தில் இதேபோல ஒரு குடும்பத்தினர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும், இறந்தவரின் மனைவி அமைச்சரை சரமாரியாக கேள்வி எழுப்பியதும், நினைவில் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்லடம் சம்பவத்தில் திமுக அரசு முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என தெரிவித்துள்ள இபிஎஸ், நாட்டில் நடக்கும் கொலைகளை தனிப்பட்ட சம்பவம் என்று கடந்து செல்லத்தான் திமுக முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தன்னைத்தானே சர்வாதிகாரி என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது என முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, விவசாய தம்பதி கொலையில் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.