வண்ணங்களைத் தூவி இளவேனிற்காலத்தை வரவேற்கும் ஒரு வசந்த திருவிழா தான் ஹோலி பண்டிகை. தீமைகள் அழித்து, நன்மைகள் ஓங்கும் ஒரு உன்னத பண்டிகை ஹோலி ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் பல நாடுகளில் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்த வண்ண திருவிழா பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
எத்தனையோ இந்து பண்டிகைகள் இருந்தாலும், ஹோலி பண்டிகையின் சிறப்பே தனித்துவம் மிக்கது. உறவுகளைக் கொண்டாடும் ஒரு மகிழ்ச்சி திருவிழாவாக ஹோலி பண்டிகை அமைந்திருக்கிறது.
ஆண்டுதோறும் மாசி மாத பௌர்ணமி தொடங்கி, பஞ்சமி வரை ஐந்து நாட்கள் திருவிழாவாக இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் 5 நாட்கள் கொண்டாடப் படும் ஹோலி, ஒரு சில மாநிலங்களில் இரண்டு நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவில் காம தகனம் என்று அழைக்கப்படும் இந்த பண்டிகை, வட இந்தியாவில் ஹோரி, டோல்யாத்ரா என்று அழைக்கப்படுகிறது.
கோவா மற்றும் மகாராஷ்டிராவில் சிம்கா, ஹோலி, ஹுதாஷனி மஹோத்சவ், மற்றும் ஹோலிகா தஹான் என்று போற்றப் படுகிறது. மேலும்,மேற்கு வங்கத்தில், ஹோலி பண்டிகை டோல்யாத்ரா என்று பெயரில் கொண்டாடப்படுகிறது.
வசந்த காலத்தை வரவேற்க பண்டிகை என்பதால், பொதுவாக, ஹோலி பண்டிகை வசந்த மகோத்சவ் என்றும் வசந்த உத்சவ் என்று அழைக்கப்படுகிறது.
சூரியனை வரவேற்கும் விதமாக, வானவில்லின் வண்ணங்களான கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்களே அதிகம் இந்தக் கொண்டாட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வண்ண வண்ணப் பொடிகளைத் தூவியும், வண்ணங்கள் கரைக்கப்பட்ட நீரைக் கொட்டியும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. .
தனது சகோதரனான இரண்யாட்சனை மகா விஷ்ணு ஏற்கனவே வதம் செய்திருந்ததால், அவர் மீது கடும் கோபம் கொண்டிருந்தான் இரண்யகசிபு. ஆனால், அவனது மகன் பிரகலாதன் பிறக்கும்போதே ஹரி பக்தனாக பிறந்தான்.
பிரகலாதன் தன் தாயின் கருவில் இருக்கும்போதே, நாரத முனிவரின் மூலமாக ஸ்ரீ மன் நாராயணனின் திரு நாமத்தைக் கேட்டறிந்தவன் . இதன் காரணமாக பிறந்தது முதலே ஸ்ரீமன் நாராயணனின் மீது தீவிரப் பக்தி கொண்டவனாக விளங்கினான். அதனாலேயே மகன் என்றும் பாராமல் ஹிரண்யகசிபு, பிரகலாதனை கொலை செய்ய பல வழிகளில் முயற்சி செய்தான்.
ஹிரண்யகசிபுவின் தங்கை தான் ஹோலிகா. தீயினால் தனக்கு அழிவில்லை என்ற வரத்தை ஹோலிகா பெற்றிருந்தாள். தன் அண்ணனுக்காக பிரகலாதனை அழிக்க முடிவு செய்த ஹோலிகா, பிரகலாதனுடன் ஒரு பெரிய தீயை மூட்டி அதற்குள் அமர்ந்தாள்.
எப்போதும் நாராயணனை துதித்த வண்ணம் இருக்கும் பிரகலாதனை தீ ஒன்றும் செய்யவில்லை. ஆனால், தீயில் அழிவில்லை என்று வரம் வாங்கியிருந்த ஹோலிகா தீயில் கருகிப்போனாள். அசுர குணம் படைத்த ஹோலிகா மறைந்த நாளே ஹோலிப் பண்டிகை என்று புராணங்கள் கூறுகின்றன. இன்றும் இந்த வரலாறு காரணமாகவே, ஹோலி பண்டிகையின் போது ஹோலிகா தகனம் நடைப்பெறுகிறது.
ஹோலிக்கு முந்தைய நாளில், மரக்கட்டைகளை வைத்து,ஹோலிகா உருவ பொம்மையை வைத்து எரியூட்டப்படுகிறது.
அப்போது, தீமைகள் அழிந்து போகட்டும் என்று மக்கள் குரல் எழுப்பி இறைவனை வேண்டுவதும் பாரம்பரியமாக உள்ளது.பிறகு, அக்னி தேவனுக்கு தேங்காய், வெற்றிலை,இனிப்பு பண்டங்கள் வைத்து பூஜை செய்யப்படுகிறது. தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவது வழக்கம்.
ஹோலிகா தகனத்துக்கு மறுநாள், ஒருவருக்கு ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஹோலிகொண்டாடப்படுகிறது.
மன்மதனை தனது நெற்றிக்கண்ணால் சிவபெருமான் அழித்தார். அம்பிகையும், மன்மதனின் மனைவியுமான ரதியும், மன்மதனுக்கு வாழ்வளிக்க வேண்டி கொண்டனர். ரதியைத் தவிர எவர் கண்ணுக்கும் தெரிய மாட்டான் என்று கூறி, மன்மதனுக்கு சிவபெருமான் வாழ்வளித்தார். சாம்பலான மன்மதன் மீண்டும் உயிர் பெற்று மீண்ட நாளே ஹோலி பண்டிகையாக கொண்டாடப் படுகிறது.
தெய்வீக அன்பின் அடையாளமாக, ஸ்ரீகிருஷ்ணரும், ராதையும் மகிழ்ந்து கொண்டாடிய திருவிழாவே ஹோலி என்று புராணங்கள் சொல்கின்றன. ஸ்ரீ கிருஷ்ணருடனும் ராதையுடனும் சேர்ந்து ஆயர்பாடி மக்களும், ஆவினங்களும் கொண்டாடிய மகிழ்ச்சித் திருவிழா தான் ஹோலியாகும்.
பேதங்களை மறந்து எல்லோரும் ஒன்று கூடிக் கொண்டாடும் ஹோலி பண்டிகை திருநாளில் அனைவரின் வாழ்விலும் வசந்தம் உண்டாகட்டும்.