பாகிஸ்தானின் பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் கடத்தப் பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தியது யார்? என்ன நோக்கத்துக்காக ரயில் கடத்தப் பட்டது ? இதன் பின்னணியில் இருப்பது யார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில், 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெஷாவர் நோக்கிச் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. நாடு முழுவதும் சுமார் 30 நிலையங்களில் நிறுத்தங்களுடன் கூடிய இந்த ரயில் பயணம் சுமார் 30 மணி நேரம் ஆகும்.
போலன் பாஸின் தாதர் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, இந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டது.ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்தும், 10 பாதுகாப்புப் பணியாளர்களைக் கொன்றும் இந்த ரயில் கடத்தப்பட்டது.
ரயிலில் இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 27 பேர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் ரயிலில் இருந்த 400 க்கும் மேற்பட்டோர் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர்.
இந்த இரயில் கடத்தலுக்குப் பலூச் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளது. தங்களுடைய கட்டுப்பாட்டில் ரயில் இருப்பதாக கூறியுள்ள பலூச் விடுதலைப் படை, பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், பணய கைதிகளைக் கொன்று விடுவதாகவும் எச்சரித்திருந்தது.
இதற்கிடையே, 100 க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், பலூச் விடுதலை படையைச் சேர்ந்த 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பலுசிஸ்தான் தலைநகரான குவெட்டாவுக்கும் சிப்பிக்கும் இடையில் 100 கிலோமீட்டருக்கும் மேல் கடினமான மலைப்பகுதிகளே உள்ளன. போலான் கணவாய்ப் பகுதி எனப்படும் இந்தப் பகுதியில் மட்டும் 17 சுரங்கப் பாதைகள் உள்ளன. கடினமான நிலப்பரப்பு காரணமாக போலன் பகுதியில் ரயில்கள் மெதுவாகவே செல்ல முடியும்.
ஏற்கெனவே, போலனில் ரயில்கள் மற்றும் ரயில் பாதைகள் மீது பல தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. ஒரு ரயிலை நிறுத்தி, பயணிகளைப் பணயக் கைதிகளாகப் பிடித்திருப்பது இதுவே முதல்முறை ஆகும்.
எண்ணெய் வளம் மற்றும் அரிய கனிமங்கள் நிறைந்த பலுசிஸ்தான், பாகிஸ்தானின் மிகப்பெரிய ஆனால் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாகாணமாகும். இது ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையாக உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது, தனி சுதந்திர நாடாக இருக்க பலூசிஸ்தான் மக்கள் விரும்பினார்கள். ஆனாலும் வலுக்கட்டாயமாக பலூசிஸ்தான், பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.
இதன் காரணமாகவே,பலூசிஸ்தான் மக்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. அது இன்னும் தொடர்ந்து வருகிறது.
பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற கொள்கையுடன் பலஅமைப்புக்கள் தற்போது தீவிரமாக போராடி வருகின்றன. அவற்றில் முக்கியமானது பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் ஆகும். இந்த அமைப்பு முதன்முதலில் 1970 களின் முற்பகுதியில் உருவானதாக நம்பப்படுகிறது.
ராணுவ சர்வாதிகாரி ஜியா-உல்-ஹக் ஆட்சிக்கு வந்த பிறகு, பலூச் தேசியவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக ஆயுதமேந்திய கிளர்ச்சி முடித்து வைக்கப் பட்டது. அதன் பிறகு, பலுசிஸ்தான் விடுதலை ராணுவமும் காணாமல் போனது.
2000 ஆம் ஆண்டில், மீண்டும் பலூச் விடுதலை இராணுவம் உருவானது. பலூச் விடுதலைப் படையில் பெரும்பாலும் மாரி மற்றும் புக்தி பழங்குடியினர் உள்ளனர். இவர்கள் பலூசிஸ்தான் சுதந்திரத்துக்காக பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். பாகிஸ்தான் அரசு பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தியது மஜீத் படைப்பிரிவு என்று கூறப் பட்டுள்ளது. இது பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தற்கொலைப் படை ஆகும். இந்த பிரிவு மஜீத் லாங்கோவ் சீனியர் மற்றும் மஜீத் லாங்கோவ் ஜூனியர் என்ற இரண்டு சகோதரர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது.
1974 ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோ, குவெட்டாவுக்கு வந்தபோது போது அவரைக் கொல்ல முயன்ற மஜீத் லாங்கோவ் சீனியர் கொல்லப்பட்டார். 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவத்தினரால் மஜீத் லாங்கோவ் ஜூனியர் கொல்லப்பட்டார்.
2011ஆம் ஆண்டு, இந்த இருவரையும் கௌரவிக்கும் வகையில், பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் மஜீத் படைப்பிரிவை உருவாக்கியது. அதே ஆண்டு டிசம்பரில், முன்னாள் பாகிஸ்தான் அமைச்சரின் மகன் ஷஃபீக் மெங்கல் மீது முதல் தற்கொலைத் தாக்குதலை மஜீத் படைப்பிரிவு நடத்தியது. இந்த தாக்குதலில் இருந்து மெங்கல் தப்பினார்.
தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டில், சீன பொறியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தியபோது மஜீத் படைப்பிரிவு பற்றி உலகத்துக்குத் தெரிய வந்தது. அதே ஆண்டு,நவம்பரில், கராச்சியில் உள்ள சீனத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். அடுத்து ஆண்டு, மே மாதம் குவாதரின் Pearl Continental ஹோட்டலிலும், அதற்கடுத்த ஆண்டு பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்திலும் தற்கொலை தாக்குதல்கள் நடத்தப் பட்டன.
மஜீத் படைப்பிரிவில் பெண்கள் உட்பட 100 முதல் 150 உறுப்பினர்கள் இருக்கலாம் என்று கூறப் படுகிறது. இவர்களில் பெண் போராளிகளும் இருக்கிறார்கள். 2022 ஆம் ஆண்டில், கராச்சியில் உள்ள கன்பூசியஸ் நிறுவனம் முன் மூன்று சீனர்களும் அவர்களின் பாகிஸ்தான் ஓட்டுநரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியது மஜீத் படைப்பிரிவைச் சேர்ந்த 31 வயது பெண் என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த அக்டோபரில் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சீன பொறியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கொல்லப்பட்டதற்கும் மஜீத் படைப்பிரிவு பொறுப்பேற்றது.
குவாதர் துறைமுகத்தை பாகிஸ்தானிடமிருந்து சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது. இதற்கு பிறகே, பலூச் விடுதலை ராணுவம் தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது.