டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 7,8,9 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், பணியிட மாற்றம், போக்குவரத்து டெண்டர், பார் லைசென்ஸ் டெண்டர், ஆகியவை சில மதுபான நிறுவனங்களுக்கு ஆதரவாக விடப்பட்டதும், டாஸ்மாக் அதிகாரிகள் உதவியுடன் பாட்டிலுக்கு ரூ.10 முதல் 30 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மேலும், எஸ்என்ஜே, கால்ஸ், அக்கார்டு, எஸ்ஏஐஎப்எல் மற்றும் ஷிவா மதுபான நிறுவனங்கள், தேவி பாட்டில்ஸ், கிரிஸ்டல் பாட்டில்ஸ், ஜிஎல்ஆர் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்கள் அதிகளவு நிதி மோசடியில் ஈடுபட்டு உள்ளதையும், சட்டவிரோத கட்டணங்கள், கணக்கில் வராத வகையில் நிதி பரிமாற்றம் நடந்ததது ஆகியனவும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
மதுபான நிறுவனங்கள் திட்டமிட்டு செலவுகளை உயர்த்தி காட்டியும், பாட்டிலிங் நிறுவனங்கள் மூலம் போலியாக கொள்முதல் செய்வது போல் காட்டியும் கணக்கில் வராத ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.