மதுபான ஊழல் விவகாரத்தைக் கண்டித்து பாஜக உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மதுபான ஊழல் விவகாரத்தில் அதிமுகவை தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறினார். ஒரு மதுபாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை பெற்று கொண்டு முறைகேடு நடந்துள்ளதாகவும், திமுக அரசின் ஊழலைக் கண்டித்து பாஜக வெளிநடப்பு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ரூபாய் சின்னத்தை மாற்றி அமைத்து திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், சட்டப்பேரவைக்கு தெரிந்தேதான் கருப்பு உடை அணிந்து வந்ததாக தெரிவித்தார். பட்ஜெட் தாக்கல் செய்ய திமுக அரசுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை எனக்கூறிய அவர், திமுக அரசு தனது மதிப்பை இழந்துள்ளதாக குறிப்பிட்டார். டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெள்ளத்தெளிவாக கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை, பாஜக ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார்.