சென்னையில் 88 கோடி ரூபாய் மதிப்பில் 7 மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்காக்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்க 310 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொருக்குப்பேட்டையில் 70 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்றும், திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும் எனவும் அறிவித்தார்.
சைதாப்பேட்டை முதல் திரு.வி.க. பாலம் வரை அடையாறு நதி சீரமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக்கூறிய அவர், 15 மாதங்களுக்குள் நதி சீரமைப்பு பணிகள் நிறைவடையும் என குறிப்பிட்டார்.
சென்னையில் 88 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக 7 மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்காக்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கூறினார்.