தமிழக பட்ஜெட்டில் எந்த புதிய திட்டங்களும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை, யாருக்கும் எதுவும் இல்லை என்ற எதார்த்தத்துடன் நிறைவடைந்திருப்பதாக விமர்சித்துள்ளார்.
கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள அவர்,
மாணவர்களுக்கு இலவச கணினி போன்ற சில கவர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், அவை மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளாகவே உள்ளதாக தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதால் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழை கட்டாயப் பயிற்று மொழியாகவும், கட்டாயப் பாடமாகவும் செயல்படுத்த எந்த அறிவிப்பையும் திமுக அரசு வெளியிடாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள அவர்,
மேலும் நடப்பாண்டின் முடிவில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கப்பட்டிருக்கும் என்றும்
மொத்தத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பயனளிக்காத, கடன் சுமையை மட்டுமே அதிகரிக்கக்கூடிய நிதிநிலை அறிக்கை எனவும் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.