பொது இடங்களில் நடைபெறும் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்படவிருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்து, பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டுமென அந்த கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க உத்தரவிட்டது.
மேலும் பேரணி பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு வழக்குவதற்காக காவல்துறைக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகத்திற்கு ஆணையிட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், காவல்துறை பாதுகாப்பிற்காக பணம் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதி, பொதுமக்களை பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் தான் காவல்துறை உள்ளது என்றும், கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் பணி அல்ல எனவும் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் அரசுக்கு செலுத்தும் வரிப் பணத்தில் தான் காவல்துறை செயல்படுகிறது என்பதால், மக்கள் பணத்தை வீணடிக்கக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதி,வரும் காலங்களில் பொதுஇடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காக குறிப்பிட்ட தொகையை நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.