ஹைப்பர் லூப் ரயில் திட்டத்தை சென்னை ஐஐடியுடன் இணைந்து ரயில்வே துறை உருவாக்கி வருவதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரயிலில் நீண்ட தூரத்தை அதிவேகமாக கடக்க ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முறையை சென்னை ஐஐடி மாணவர்கள் அண்மையில் உருவாக்கி இருந்தனர். இதுதொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு, விமான நிலையத்தில் பூர்ண கும்ப மரியாதை அளித்து, பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே துறையில் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் மிக முக்கியமான வளர்ச்சி என்றும், சென்னை ஐஐடி முன்னெடுத்துள்ள இந்த திட்டத்திற்கு இந்திய ரயில்வே உறுதுணையாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, சென்னையில் இருந்து ஜோத்பூர் வழியாக ஜாலூர் பகுதிக்கு வாரத்திற்கு 3 நாட்கள் ரயிலை இயக்க வேண்டும் என சென்னை வாழ் ராஜஸ்தான் மக்கள், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை விடுத்தனர்.