கோவை பேரூரில் லஞ்ச பணத்தை குளத்தில் வீசிய கிராம நிர்வாக அலுவலரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலந்துறை அடுத்த மத்துவராயபுரத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், அந்த கிராம நிர்வாக அலுவலரான வெற்றிவேலிடம் வாரிசு சான்றிதழ் கேட்டுள்ளார். அதனை வழங்க கிருஷ்ணசாமியிடம் வெற்றிவேல் 3 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிருஷ்ணசாமி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்த அதிகாரிகள் மறைந்திருந்து வெற்றிவேலை பிடிக்க காத்திருந்தனர்.
கிருஷ்ணசாமியிடம் இருந்து வெற்றிவேல் பணத்தை வாங்க முற்பட்டபோது அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்து தப்பிக்க முயன்ற வெற்றிவேல் தனது கையில் இருந்த பணப்பையுடன் பேரூர் குளத்திற்குள் குதித்தார்.
தொடர்ந்து அவரைப் பிடித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் லஞ்சம் கேட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து குளத்திற்குள் வீசப்பட்ட பணத்தை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.