சுனிதா வில்லியம்ஸை மீட்பதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்தாண்டு ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர்.
இருவரும் 10 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத நிலை உருவானது. தொடர்ந்து செப்டம்பர் 7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளி வீரர்கள் இன்றி பூமிக்கு திரும்பியது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் பூமிக்குத் திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான முயற்சிகள் கைகூடாத நிலையில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் உதவியை நாசா நாடியது. அதன்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் க்ரூ விண்கலம் நேற்று விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில் விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கும் பணியான டாக்கிங் காலை 9.36 மணியளவில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. டிராகன் விண்கலத்தில் சென்ற 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி மையத்திற்குள் நுழைந்தனர். அவர்களை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து வரும் 19-ம் தேதி டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 பேரும் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.