அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் பெஞ்சல் புயல் பாதிப்பை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தபோது அவர் மீது சேற்றை வீசியதாக இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில், அமைச்சர் மீது அரசியல் உள்நோக்கத்துடன் சேறு வீசப்பட்டதால் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் புயல் பாதிப்பிற்கு நிவாரணம் எதுவும் உடனடியாக வழங்காததால் விரக்தியில் சேற்றை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.