டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.
மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டு திமுக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவினர் கைதை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திமுகவிற்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் அங்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதேபோல கோவையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்தும், பாஜக தலைவர்கள் கைதை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர்.