ஓசூர் அருகே இரட்டைக் கொலை நடந்த பகுதி அருகே உள்ள வீட்டில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த ஒன்னல்வாடி கிராமத்தில் கடந்த வாரம் வீட்டில் இருந்த 2 முதியவர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை பிடிக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், இரட்டை கொலை நடந்த வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நஞ்சாரெட்டி என்பவர் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று நள்ளிரவு நஞ்சாரெட்டி வீடு திரும்பிய நிலையில், திடீரென சத்தம் கேட்டதால் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளார். அப்போது, ஒரு சிசிடிவி கேமராவை உடைத்து மர்மநபர் சுவர் ஏறி குதிப்பதை உறுதி செய்த அவர், கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நஞ்சாரெட்டி வீட்டை சூழ்ந்து கிராம மக்கள், சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற மர்மநபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ராஜா என்பவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.மேலும், தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.