திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 57 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பாலாஜி நகரில் வசித்து வரும் மாநகராட்சி ஊழியரான ஸ்ரீதர் என்பவர் வழக்கம்போல பணிக்கு சென்றுள்ளார். வெளியூருக்கு சென்றிருந்த ஸ்ரீதரின் மனைவி முத்துச்செல்வி வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 சவரன் நகை, 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளைபோனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அதே பகுதியில் உள்ள செல்வகுமார் என்பவர் வீட்டில் 35 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், கொள்ளிடம் பகுதியில் உள்ள இரு வீடுகளிலும் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து திருச்சி டோல்கேட் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் மற்றும் கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.