திராவிட மாடல் அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் ஆலய வருமானத்தை சுரண்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஆலய வருமானத்தை சுரண்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டும் திராவிட மாடல் அரசும், இந்து சமய அறநிலையத்துறையும், ஆலயங்களுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பையும், தேவையான அடிப்படை வசதிகளையும் உரிய வகையில் செய்து கொடுக்காமல் அலட்சியம் காட்டி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என எச். ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்றைய தினம் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், இராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் அதே போல் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சோகம் மீண்டும் நிகழ்ந்துள்ளது என எச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.
பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம், சமயபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை தரும் அனைத்து கோயில்களிலும் ஆலய நுழைவு வாயில் அருகே எந்நேரமும் மருத்துவர் மற்றும் செவிலியர் குழு அடங்கிய மருத்துவ முதலுதவி சிகிச்சை மையம் ஒன்றை அமைக்க இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பணம் வசூலிப்பதில் காட்டும் அக்கறையை பக்தர்களின் உயிர் மீதும் காட்ட இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர், கழிப்பறை வசதி, நல்ல காற்றோட்டமான சூழ்நிலை மற்றும் மின் விசிறிகள் அமைத்து முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகள் அமர ஆங்காங்கே இருக்கைகள் அமைத்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
















