தஞ்சை பெரிய கோயிலுக்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் உலக புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வருவது வாடிக்கை. இந்நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்ற முதியவர் நேற்று, இந்த கோயிலுக்குத் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்துள்ளார்.
அப்போது கோயிலின் உட்பிரகாரத்தில் திடீரென மயங்கி விழுந்த அவரை குடும்பத்தார் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் கோயிலுக்கு வந்த பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.