காவல் துறையின் அலட்சியமே முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாகிர் உசேன் கொலைக்கு காரணம் என அவரது மகன் குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லையை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய ஜாகிர் உசேன், பொதுவெளியில் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஜாகிர் உசேனுக்கும் நெல்லையைச் சேர்ந்த மற்றொருவருக்கும் இடையே இடப் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், காவல் துறையின் அலட்சியம் காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டதாக ஜாகீர் உசேனின் மகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, ஜாகீர் உசேன் கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக டவுண் காவல் நிலைய ஆய்வாளர் கோபால கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், டவுண் சரக முன்னாள் காவல் உதவி ஆணையரான செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரெளடி முகமது தவுஃபிக்கை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.