சர்வதேச சுற்றுப் பயணங்களின்போது, இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விதிகளைத் தளர்த்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில், இந்திய கிரிக்கெட் அணி மோசமாக தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்குப் பிறகு, இந்திய அணி மற்றும் துணை ஊழியர்களுக்கு பிசிசிஐ புதிய வழிகாட்டுதல்களை அறிவித்தது.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது ஒரு வீரருடன் குடும்ப உறுப்பினர்கள் வருவதற்கான கால வரம்பையும் பிசிசிஐ நிர்ணயித்தது. அதன்படி, 45 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பயணத்துக்கு, ஒரு வீரருடன் அவரது குடும்பத்தினர் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்க அனுமதி கிடையாது.
சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில், குடும்ப உறுப்பினர்கள் ஒரு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கும் வகையில் பிசிசிஐ விதியைத் தளர்த்தியது. இதன் காரணமாக, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் போது, விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும், கேப்டன் ரோஹித்தின்மனைவியான ரித்திகா சஜ்தேவும் மைதானத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், Royal Challengers Innovation Lab Indian Sports மாநாட்டில் விராட் கோலி கலந்து கொண்டு உரையாற்றினார். வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் நீண்ட நாட்கள் தங்கள் குடும்பத்தைப் பிரிந்திருக்க வேண்டியுள்ளது. இதனால், கிரிக்கெட் வீரர்களுக்குக் கடுமையான மன அழுத்தங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
எந்த வீரரும் சுற்றுப்பயணத்தின்போது மோசமாக விளையாடிய பிறகு தனியாக உட்கார்ந்து அழ விரும்ப மாட்டார்கள் என்றும் கூறிய விராட் கோலி, எந்த நேரத்திலும் குடும்பத்துடன் நேரம் செலவிடும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
மேலும், உண்மையான வழியில், தங்களின் கடமை,பொறுப்பை முடித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கவே எல்லோரும் விரும்புவதாக விராட் கோலி குறிப்பிட்டிருந்தார்.
குடும்பத்தினர் உடன் இல்லாமல் நீண்ட நாட்கள் போட்டிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் கிரிக்கெட் வீரர்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகளை விராட் கோலியின் கருத்துக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின.
தற்போதைய பிசிசிஐ கொள்கையின்படி, சுற்றுப்பயணங்களின்போது குடும்பத்தினரின் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர், இடம் மற்றும் அட்டவணை தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில், விளையாட்டு வீரர்களின் மன சங்கடத்தை விராட் கோலி வெளிப்படுத்தி இருப்பதால், பிசிசிஐ தனது கொள்கை விதிகளை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகக் கூறப் படுகிறது.
இது குறித்து, அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், குடும்பத்தினரை நீண்ட நாட்கள் தங்களுடன் தங்க வைக்க விரும்பும் வீரர்கள், முன் கூட்டியே விண்ணப்பித்துச் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐசிசி போட்டிகள் மற்றும் இருதரப்பு தொடர்கள் உட்பட சர்வதேச கிரிக்கெட் அட்டவணை நிரம்பியிருப்பதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த முடிவு, இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாகத்தைத் தேவையான மன உறுதியைக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.