பழனி மலைக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த செல்வமணி, நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவராக பதவி வகித்தார். சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு பழனி முருகனை தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார். படிவழிப் பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்ற செல்வமணி, பத்து ரூபாய் தரிசன சீட்டு வாங்கி வரிசையில் காத்திருந்தார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்த நிலையில், பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் செல்வமணி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே பழனி மலைக்கோயில் படிவழிப் பாதையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் பார்லர் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களாக அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர், ராமேஸ்வரம், தஞ்சாவூர் போன்ற முக்கிய கோவில்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி பக்தர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது பழனி கோயிலிலும் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.