நாக்பூர் வன்முறை தொடர்பாக ஃபாஹிம் கான் என்பவரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது. அவரது பின்னணியைப் பற்றிப் பார்க்கலாம்.
இஸ்லாமிய மன்னர் ஔரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் கடந்த திங்கட் கிழமை நாக்பூரில் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில், மதநூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால் வன்முறை வெடித்தது.
கிட்டத்தட்ட 1,000 பேர் தெருக்களில் இறங்கி கலவரத்தில் ஈடுபட்டனர். இது பெரிய அளவிலான வன்முறைகளுக்கு வழிவகுத்தது. போக்குவரத்து ஸ்தம்பித்தது. கற்கள் வீசப்பட்டன. தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. ஜேசிபி உட்பட ஏராளமான வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப் பட்டன. வீடுகள் சேதப் படுத்தப் பட்டன. காவல்துறையினரைத் தாக்க வன்முறைக் கும்பல் கோடாரிகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் போன்ற ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த வன்முறைச் சம்பவத்தில், 3 காவல் துறை துணை ஆணையர்கள். காவலர்கள் உட்பட 34 பேர் படுகாயமடைந்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் வன்முறை கும்பல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை தொடர்பாக,6 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக, இதுவரை 54 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இதற்கிடையே, நாக்பூர் வன்முறைக்குத் தலைமை தாங்கிய முக்கிய குற்றவாளியான ஃபாஹிம் ஷமிம் கான் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.
38 வயதான ஃபாஹிம் ஷமிம் கான், நாக்பூரில் சிறுபான்மையினர் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக உள்ளார். முகமது ஹமீத் இன்ஜினியர் தலைமையிலான இமான் தன்ஸீமின் அரசியல் பிரிவாக இந்த கட்சி 2009 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் நாக்பூரில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரிக்கு எதிராகப் போட்டியிட்டார். ஆனால் வெறும் 1000 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
நாக்பூர் வன்முறைகளுக்கு மூளையாகச் செயல்பட்ட கான் கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறையைத் தூண்டியதாகவும், புனித நூல் சேதப்படுத்தப்பட்டதாக வதந்திகளைப் பரப்பியதாகவும் பாஹிம் கான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதலில் கணேஷ் பெத் காவல் நிலையம் அருகிலும், பின்னர் மஹால் பகுதியில் உள்ள ஒரு மசூதியிலும் இஸ்லாமியர்களை ஒன்று கூட கான் வலியுறுத்தினார். இந்த இரண்டு இடங்களிலும் தான் வன்முறைகள் வெடித்துள்ளன. இந்து அமைப்புக்களின் போராட்டத்துக்குப் பின், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, கானின் ஆதரவாளர்கள் கணேஷ்பேத் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். அதற்குப் பின்னரே வன்முறை நடந்துள்ளது எனக் காவல் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கான் மக்களைத் தூண்டிவிட்டார், வன்முறையைத் தூண்டினார், மேலும் ஒரு புனித நூல் அவமதிக்கப்பட்டதாக வதந்திகளைப் பரப்புவதில் பங்கு வகித்தார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.