உலக பனிப் பாறைகள் தினம் கொண்டாடப்படும் நாளில், உலகின் முதல் பனிப் பாறை கல்லறை பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
உலகளவில் 2,75,௦௦௦-க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக இவை சுமார் 700,000 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன. உலக அளவில் சுமார் 70 சதவீத நன்னீரைப் பனிப்பாறைகளே சேமித்து வைத்துள்ளன. மனிதக்குலத்தின் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு நன்னீரை வழங்குவதால், பனிப்பாறைகள் “உலகின் நீர் கோபுரங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2023ம் ஆண்டில், பனிப்பாறைகள் மிகப்பெரிய அளவில் காணாமல் போயுள்ளன. கடந்த ஆண்டை உலகின் மிகவும் வெப்பமான ஆண்டாக உலக வானிலை மையம் உறுதிப்படுத்தியது.
காலநிலை மாற்றம் காரணமாக இந்த பனிப் பாறைகள் விரைவாகப் பின்வாங்கி வருகின்றன. உருகும் பனி மற்றும் பனிப்பாறைகள் பல மில்லியன் மக்களுக்கு நீண்டகால நீர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
பனிப்பாறைகள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். மக்களுக்கான குடிநீர், விவசாயத்துக்கான நீர், தொழில்துறைகளுக்கான நீர், சுத்தமான எரிசக்தி உற்பத்தி மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குப் பனிப்பாறைகள் மிகவும் அவசியமானவை ஆகும். எனவே தான், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் தேதி, உலக பனிப் பாறைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. குறிப்பாக, இந்த ஆண்டை, சர்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டாக ஐநாசபை அறிவித்துள்ளது.
யுனெஸ்கோவும், உலக வானிலை அமைப்பும் சர்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டை வழிநடத்துகின்றன. மேலும், 35 நாடுகளும், 75-க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகளும் சர்வதேச அளவில்,கால மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் உலகளாவிய தாக்கங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் தான், ஐஸ்லாந்தில் முதல் பனிப்பாறையின் மறைவு குறித்த செய்திகளும் அதற்கான செயற்கைக் கோள் படங்களும் வெளியாகியுள்ளன. பனிப்பாறைகள் ஐஸ்லாந்தின் முக்கிய அடையாளமாகும். நீல நிறமும் வெள்ளை நிறத்தில் கோடிட்டுக் காட்டப்பட்ட சிவப்பு சிலுவையும் ஐஸ்லாந்தின் தேசியக் கொடியில் உள்ளது.
சிலுவை கிறிஸ்தவத்தையும், சிவப்பு நிறம் எரிமலைகளின் நெருப்பையும், நீல நிறம் வானத்தையும் கடலையும், வெள்ளை நிறம் பனிக்கட்டியையும் குறிக்கிறது.
ஓக்ஜோகுல் Okjökull என்பது Reykjavík ரெய்க்ஜாவிக் நகரிலிருந்து வடமேற்கே 71 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 3,940 அடி உயரமான AUK எரிமலையில் உள்ள சிகர பள்ளத்தாக்கைச் சுற்றி இந்த பனிப்பாறை அமைந்துள்ளது. இந்த பனிப்பாறை ஒரு குவிமாட வடிவ பனிப்பாறை ஆகும்.
1901ம் ஆண்டில், இதன் பனிப் படலங்கள் சுமார் 39 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியதாகும். ஆனால் இரண்டு செயற்கைக்கோள் புகைப்படங்களில் முதலாவது 1986 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் படத்தில் 2.6 சதுர கிலோமீட்டருக்கும் குறைவான பனி மிஞ்சியிருந்தது.
2019 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக இந்தப் பனிப்பாறையைச் செயற்கைக் கோள் படம் எடுத்தது. அதில், 1 சதுர கிலோமீட்டருக்கும் குறைவாகவே பனி இருந்தது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் முதல் முறையாக, இந்த பனிப்பாறை நகர்வதை நிறுத்திவிட்டது என்று வானிலை அறிஞர்கள் 2014 ஆம் ஆண்டில்தான் அறிவித்தனர். ஓக்ஜோகுலின் தான், கால நிலை மாற்றத்தின் விளைவாக, மரணமடைந்த முதல் பனிப் பாறை ஆகும்.
ஐஸ்லாந்து முழுவதும் 300க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் இருக்கின்றன. 2017 -ஆம் ஆண்டுக்குள், அவற்றில், 70 சிறிய பனிப்பாறைகள் மறைந்துவிட்டன. ஐஸ்லாந்தின் இரண்டாவது பெரிய பனிப்பாறையான (Langjökull )லாங்ஜோகுல் அதிக ஆபத்தில் உள்ளது. 2100 ஆம் ஆண்டுக்குள் அந்த பாறையில் 10 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
2019ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பிசோல், 2023 ஆண்டில் பிரான்சின் சரென், 2015 ஆம் ஆண்டில்,அமெரிக்காவின் ஆண்டர்சன் மற்றும் 2018 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் மார்ஷியல் சுர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட பனிப் பாறைகள் காணாமல்போகும் நிலையில் உள்ளன. ஏற்கெனவே, 10,000 பனிப்பாறைகள் காலநிலை மாற்றத்தால் அழிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.