சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசும், காவல்துறையும் முன்னுரிமை அளிக்க வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சர்வ சாதாரணமாக கொலை சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் அரங்கேறுவதாக தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் காரில் சென்றவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்யும் காட்சி, தமிழகத்தில் நிம்மதியாக வாழ முடியாது என மக்கள் அச்சப்படும் நிலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆளுங்கட்சிக்கு பணி செய்வதை மட்டுமே காவல்துறை செய்துகொண்டிருப்பதாக விமர்சித்துள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், ஜனநாயக வழியில் போராடுவோரை தடுப்பதிலேயே காவல்துறையின் முழு சக்தி செலவிடப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜகவை சேர்ந்த பாலசந்தர், ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசைன் ஆகியோரது கொலைகளை சுட்டிக் காட்டியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், போலீசார் ஒழுங்காக தங்கள் கடமையை செய்திருந்தால் இந்த கொலைகள் நடந்திருக்காது என கூறியுள்ளார்.