குமாரகோவில் அருகே உள்ள முருகன் கோயிலில் வள்ளி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் உள்ள குமாரசுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது, முருகப்பெருமானும், வள்ளி தேவியும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி கோயிலை நோக்கிச் சென்றனர். திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வள்ளி தேவியின் உறவினர்கள் முருகப்பெருமானைத் தடுத்து நிறுத்திச் சண்டையிட்டனர். இந்த குறவர் படுகளம் நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
இதனைத் தொடர்ந்து கோயிலைச் சென்றடைந்த முருகப்பெருமானும், வள்ளி தேவியும் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். பின்னர், மங்கள வாத்தியம் இசைக்கத் தேவி கழுத்தில் முருகப்பெருமான் தாலி கட்டும் வைபவம் நடைபெற்றது.