விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சென்னையில் நாளை நடத்தப்படவுள்ள பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிந்து மக்களின் கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பிற்காகச் செயல்பட்டு வரும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் தென்சென்னையில் நாளை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்திற்குப் பின் சென்னை நங்கநல்லூரில் இந்து சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தி மாலை 5.30 மணி முதல் 10 மணி வரை பொதுக்கூட்டமும் நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டிருந்தது.
இந்த பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி கடந்த 10ஆம் தேதி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பு வழக்கறிஞர் பால.மணிமாறன், மற்ற அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிப்பதுபோல் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்தவுள்ள பொதுக்கூட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.