இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேரக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது.
அதில், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவில் விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து ப்ளே கேம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ் நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.
இதுகுறித்த விசாரணையின் போது பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு தரப்பு, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவே ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்காக கொண்டு வரப்படவில்லை என்றும் தெரிவித்தது.
இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆன் லைன் விளையாட்டுகளுக்கு நேரக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாகவும் கூறியது. மேலும் சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலேயே ஆதார் கட்டாயமாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு இறுதி விசாரணைக்காக மார்ச் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.