ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மான நகலைச் செயல் அலுவலர் கொடுக்காததால் உறுப்பினர்களும், பொதுமக்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடுமுடி பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த திலகவதி என்பவர் உள்ளார். இவர் மீது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் உள்ள 15 கவுன்சிலர்களில் 12 கவுன்சிலர்கள் பங்கேற்று திலகவதிக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனால், திமுக பேரூராட்சி தலைவர் திலகவதி தோல்வி அடைந்தார். இந்நிலையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தொடர்பான தீர்மான நகலைச் செயல் அலுவலர் கொடுக்காத காரணத்தால் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், திமுகவைச் சேர்ந்தவர்கள் பேரூராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கவுன்சிலர்களுக்கு ஆதரவாக 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.