கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் மராட்டிய மொழி பேசவில்லை எனக்கூறி அரசு பேருந்து நடத்துனரை மராட்டிய அமைப்பினர் தாக்கினர்.
இதற்குக் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தைக் கண்டித்தும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கன்னட அமைப்பினர் அறிவித்தனர்.
இந்த நிலையில், போராட்டம் எதிரொலியாக பல்வேறு பகுதிகளில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் கர்நாடக அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தமிழக எல்லையை நோக்கி வர முயன்றனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை, 20க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.