தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றதைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் பல்வேறு இடங்களில் பாஜகவினர், வீட்டின் முன் நின்று கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாநகர் பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமையில் கோமதி புரத்தில் பாஜகவினர் திமுக அரசைக் கண்டித்து பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். போராட்டத்தின்போது பாஜகவினரைக் கைது செய்யப் போவதாக காவல்துறை மிரட்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் திமுக அரசைக் கண்டித்து பாஜகவினர் கைகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் திமுக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
இதேபோல் காஞ்சிபுரத்தில் பா.ஜ.கவினர் தமிழக அரசைக் கண்டித்து கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை காவல்துறை கைது செய்ததால், திமுக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தமிழக அரசைக் கண்டித்து விழுப்புரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் ஏஜி சம்பத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கருப்பு கொடி ஏந்தி திமுக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.