தொடர் தோல்வி, உட்கட்சி பூசலால் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியைப் புறந்தள்ளிவிட்டு தேசிய அளவில் எதிர்க்கட்சியாக வலம் வர திமுக திட்டமிட்டிருக்கிறது. அதற்காகத் தமிழக அரசு நடத்தியிருக்கும் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் குறித்தும், அதனால் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20க்கும் அதிகமான படுகொலைச் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கின்றன. கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் எனச் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்திருக்கும் மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்து வருவதாகப் புகார் எழுந்திருக்கிறது.
அதோடு டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் திமுக அரசு மீதான பொதுமக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழக்கச் செய்திருக்கிறது. அரசு நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கும் கொந்தளிப்பைத் திசைதிருப்ப முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் தோல்வியில் முடிவடைந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளைத் திரட்டி தொகுதி சீரமைப்பைக் கையில் எடுத்திருக்கிறது திமுக அரசு
மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் குப்பைக் கிடங்காகத் தமிழகத்தைப் பயன்படுத்துவதோடு, முல்லைப்பெரியாற்றில் புதிய அணையைக் கட்டி தென்மாவட்ட விவசாயிகளை வஞ்சிக்கத் துடிக்கும் கேரள அரசு, காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் மேகதாதுவில் அணையைக் கட்டியே தீருவோம் எனப் பிடிவாதம் பிடிக்கும் எனக் கர்நாடகம் எனத் தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயல்படும் அரசியல் கட்சிகளை அழைத்து தமிழகத்தின் உரிமையை மீட்கிறோம் எனும் பெயரில் தமிழக அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டம் தமிழக மக்களின் கோபத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.
தேசிய அளவில் தொடர் தோல்வி, உட்கட்சி பூசல் எனத் தொடர் பின்னடைவைச் சந்தித்துவரும் காங்கிரஸ் வகித்து வரும் இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றவும் திமுக அரசு முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய அளவிலான பிரச்சனைகளுக்கு முதல் ஆளாகக் குரல் கொடுப்பதும், சம்பந்தமில்லாத அண்டை மாநில பிரச்சனைகளில் தலையிடுவதும் எனத் தமிழக முதல்வரின் அண்மைக்கால செயல்பாடுகள் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராகத் தன்னை முன்மொழிய வேண்டும் என திமுகவினர் பலர் வலியுறுத்திய நிலையில், தன் உயரம் தனக்குத் தெரியும் என்ற தொனியில் கடந்து சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின், தற்போதைய திமுக ஆட்சி மீதான ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை எதிர்கொள்ளத் தேசிய அளவில் முக்கிய தலைவராக வலம்வர முடிவு செய்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதைப் போலவே, ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலக் கட்சிகளுடன் இணைந்து செயல்படும் காங்கிரஸ் கட்சியை நம்பி இனியும் பயனில்லை என்பதை உணர்ந்து விட்ட திமுக, காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டிவிட்டு தேசிய அளவில் எதிர்க்கட்சி அந்தஸ்தைத் தக்க வைப்பதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு எதிராகத் தமிழக அரசு ஏற்பாடு செய்த ஆலோசனைக் கூட்டத்தில் தெலுங்கானா, பஞ்சாப் மற்றும் கேரள மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். திமுக அரசின் இரட்டை நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டதாலே கர்நாடக முதலமைச்சர் சித்தராமையை இக்கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
அதே போன்று, இண்டி கூட்டணியின் தலைவராக விரும்பும் மம்தா பானர்ஜியும், ஸ்டாலினின் கூட்டத்தை புறக்கணித்து விட்டார். இதேபோல், பல்வேறு மாநில தலைவர்கள் தங்கள் சார்பாகப் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்து திமுகவின் தலைமையை ஆதரிக்கத் தயாராக இல்லை என்பதை மறைமுகமாகத் தெரிவித்துள்ளனர்.
தொகுதி சீரமைப்பில் தென்னிந்திய மாநிலங்களுக்கு ஒரு தொகுதி கூட குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷாவே உறுதி அளித்த பின்னரும், இதுபோன்ற ஒரு கூட்டத்தை நடத்தி தேசிய அளவில் தன்னை மிகப்பெரிய தலைவராக உயர்த்திக் கொள்ள நினைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணம் ஈடேறுமா ? தன் இடத்தை ஆக்கிரமிக்க நினைக்கும் திமுகவின் செயல்பாடுகளுக்குக் காங்கிரஸ் தொடர்ந்து ஆதரவளிக்குமா ? திமுக அரசு நடத்தும் அரசியல் நாடகத்திற்கு மக்களின் ஆதரவு கிடைக்குமா ? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அடுத்தடுத்த நாட்களே பதிலாக அமையும்.