டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் எடுக்கப்பட்டதாக வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா, ஓரிரு நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து கிடந்தன.மேலும், கணக்கில்வராத பணக்குவியல்களை போலீசார் கண்டெடுத்ததாக தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு அதை அனுப்பி வைத்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற கொலீஜியத்தின் அவசர ஆலோசனை கூட்டத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் துறை ரீதியிலான விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் யஷ்வந்த் வர்மா குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கல் செய்த அறிக்கை மற்றும் வீடியோ ஆவணங்கள் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.