இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் முட்டை விலை உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் முட்டை பற்றாக்குறை ஏற்பட என்ன காரணம் ? எப்படி சமாளிக்கப் போகிறது அமெரிக்கா என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வரிவிதிப்பு என்ற ஆயுதத்தை வைத்துக் கொண்டு, அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கெல்லாம் அதிக வரி விதிப்பது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செயல்பட்டு வருகிறார். கனடா, மெக்சிகோ, சீனா மீது அதிக வரி விதித்த கையோடு பிற நாடுகளுக்கும் பரஸ்பர வரிவிதித்தார் ட்ரம்ப். இப்போது தான் விரித்த வலையில் தானே சிக்கி இருக்கிறார் ட்ரம்ப்.
2022ம் ஆண்டு அமெரிக்க கோழிப் பண்ணைகளில் H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. உடனே 50 மாகாணங்களில் உள்ள 1600-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வைரஸ் தாக்கப்பட்ட 200 மில்லியனுக்கும் அதிகமான கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. கோழிப் பண்ணைகள் முடங்கின. அமெரிக்காவில் பெரிய முட்டை பற்றாக்குறை ஏற்பட்டது.
இதன் விளைவாக முந்தைய ஜோ பைடனின் பதவிக்காலத்தில் முட்டை விலை அதிகரிக்க தொடங்கின. தேர்தல் பிரச்சாரத்தின் போது, முட்டை விலைகளைக் குறைப்பதாக ட்ரம்ப் உறுதியளித்த போதிலும், கடந்த டிசம்பரில் முட்டை விலை 65 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதம், முட்டை பற்றாக்குறையை சரிசெய்ய 1 பில்லியன் டாலர், ஒதுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
உயிரியல் பாதுகாப்பை மேம்படுத்த சுமார் 500 மில்லியன் டாலரும், தடுப்பூசிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக சுமார் 100 மில்லியன் டாலரும், நிவாரண நிதிக்காக 400 மில்லியன் டாலரும் ஒதுக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் முட்டை விலை எக்கசக்கமாக அதிகரித்துள்ளது. ஒரு டஜன் உயர்தர முட்டைகளின் விலை 510 ரூபாயாகும். குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு டஜன் முட்டைகளின் விலை 870 ரூபாய் ஆகும். ஆனால், மெக்சிகோவில் ஒரு டஜன் முட்டைகளின் விலை இப்போதும் சராசரி 2 டாலருக்கும் குறைவாகவே உள்ளது.
முட்டை பற்றாக்குறை காரணமாக, அமெரிக்க சூப்பர் மார்க்கெட்களில், வாடிக்கையாளர்கள் வாங்கும் முட்டை எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது. மேலும்,முட்டைகளால் ஆன உணவு ரகங்கள் விற்பனையை ஹோட்டல்கள் நிறுத்தி விட்டன.
கடந்த இரண்டு மாதங்களாகவே பின்லாந்து, டென்மார்க், சுவீடன் மற்றும் நெதர்லாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளுடன் முட்டைகளை அமெரிக்காவுக்கு வழங்குமாறு ட்ரம்ப் கோரிக்கை வைத்திருந்தார்.
முட்டை விலையைக் கட்டுப்படுத்த 10 கோடி முட்டைகளை உடனடியாக இறக்குமதி செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய முடியுமா என கேட்டு அமெரிக்க வர்த்தக துறை அதிகாரிகள் கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
தங்கள் பொருட்களுக்கு 25 சதவீதத்துக்கு மேல் ஏற்றுமதி வரி விதித்த அமெரிக்காவை பழிவாங்க இதுவே சரியான நேரம் என கருதிய ஐரோப்பிய நாடுகள், முட்டை விஷயத்தில் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்ய மறுத்துள்ள பின்லாந்து, அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய தேசிய அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது.