விதிகளை மீறிச் செயல்படும் சாயப்பட்டறை ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், பவானி சாகர் ஆற்றங்கரை ஓரத்தில் அமைக்கச் சாயப்பட்டறைக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதியை அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பவானி ஆற்றங்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சாயப்பட்டறை அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த ஆலையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று ஏற்கனவே புகார் வந்திருப்பதாகவும் கூறினார்.
ஆலைகளில் வெளியேறும் கழிவுநீரை சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கும் பணி நடைபெறும் எனவும், விதிகளை மீறினால் அந்த ஆலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.